மீனம்

மன்மத வருட ராசி பலன்கள் 
 Tamil Horoscope Rasi Palan


மீனம் : மன்மத வருட ராசி பலன்

உள்மனம் சொல்வதை அப்படியே செய்பவர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டில் புத்தாண்டு பிறப்பதால் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் வரும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். மூத்த சகோதர வகையில் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உங்கள் ராசியிலேயே கேது 7.1.2016 வரை இருப்பதால் கோபப்படுவீர்கள்.
குடும்பத்தில் சலசலப்புகள் வந்து போகும். சளித் தொந்தரவு, காய்ச்சல், தோல் நமைச்சல் வரக்கூடும். உடம்பில் இரும்புச் சத்து குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே பச்சைக் கீரை, காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலேயே 7.1.2016 வரை ராகு நீடிப்பதால் கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சிறிய விஷயங்களையெல்லாம் பெரிதாக்கிக் கொண்டிருக்காதீர்கள்.
இருவரும் மனம்விட்டுப் பேசுவது நல்லது. வீண் சந்தேகத்தை தவிர்க்கப் பாருங்கள். 8.1.2016 முதல் ராகுவும், கேதுவும் சாதகமாக மாறுவதால் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பிரிந்திருந்தவர்கள் ஒன்றுசேருவார்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டினரால் ஆதாயம் அடைவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் ராசிநாதன் குருபகவான் 5-ம் வீட்டில் உச்சம் பெற்று வலுவடைந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்தில் உங்களுக்கு சேரவேண்டிய பங்கு கைக்கு வரும். 5.7.2015 முதல் உங்கள் ராசிநாதன் 6-ல் சென்று மறைவதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்துவைக்க முடியாதபடி செலவுகள் வந்துகொண்டே இருக்கும்.
யாரும் உங்களை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். நன்றி மறந்த சிலரை நினைத்து வருந்துவீர்கள். 8.1.2016 முதல் உங்கள் ராசிநாதன் குருபகவான், ராகுவுடன் சம்பந்தப்படுவதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல், கொழுப்புக் கட்டி, கை, கால் வலி, அசதி, சோர்வு வந்து போகும். சிறுசிறு விபத்துகளும் நிகழக்கூடும். உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சனிபகவான் அமர்ந்திருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால் தந்தையுடன் மோதல்கள், அவருக்கு நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் வந்து போகும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும். வேலையாட்களின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை கலந்துபேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடித்துக்காட்டுவீர்கள்.
ஜூலை மாதத்துக்குள் புது வாய்ப்புகள், சம்பள உயர்வு, புது சலுகைகள் கிடைக்கும். ஆனால் 5.7.2015 முதல் உங்கள் ராசிநாதனும், உத்தியோக ஸ்தானாதிபதியுமான குருபகவான் 6-ல் சென்று மறைவதால் உத்தியோகத்தில் உங்கள் நிலையை தக்கவைத்துக்கொள்ள போராடவேண்டி வரும். இந்த மன்மத ஆண்டு உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரியவைக்கும். அலைச்சலோடு ஆதாயத்தையும் தரும்.