கும்பம்

மன்மத வருட ராசி பலன்கள் 
 Tamil Horoscope Rasi Palan


Astrology‎ Tamil


Aries | Taurus | Gemini | Cancer | Leo | Virgo
Libra | Scorpio | Sagittarius | Capricorn | Aquarius Pisces


கும்பம் : மன்மத வருட ராசி பலன்

உதவும் மனப்பான்மை உடையவர்களே! உங்களது பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சுக ஸ்தானத்தில் ஆட்சிபெற்று வலுவடைந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள்.
வங்கிக் கடனுதவியுடன் வீடு கட்டத் தொடங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் குருபகவான் அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். குடும்பத்தில், கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். மறைமுகப் பகை வந்துபோகும். பழைய கடன் பிரச்சினையால் நிம்மதி இழப்பீர்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையெழுத்திட்டு வைக்கவேண்டாம்.
5.7.2015 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால் சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகம் அடைவீர்கள். அழகு, இளமை கூடும். குடும்பத்தில் இருந்த சலசலப்புகள் அடங்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்றுசேருவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். திடீர் பணவரவு உண்டு. முடங்கிக் கிடக்கும் தொழில் சூடுபிடிக்கும். அடகில் இருந்த நகை, வீட்டு பத்திரத்தை மீட்க புது கடனுதவி கிடைக்கும்.
நோய் குணமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால் பணப்பட்டுவாடா விஷயத்தில் கவனமாக இருங்கள். மற்றவர்களுக்காக சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.
குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். 8.1.2016 முதல் கேது உங்கள் ராசிக்குள் நுழைவதால் செரிமானக் கோளாறு, தலைசுற்றல், நெஞ்சு எரிச்சல், எதிலும் ஒருவித வெறுப்புணர்வு வந்து நீங்கும். நேரில் நல்லவர்களாக காட்டிக்கொள்பவர்கள் உங்களைப் பற்றி வெளியே தவறாகப் பேசுவார்கள். ஆனால் குருவின் பார்வை ராசியில் இருக்கும் கேது மீது விழுவதால் கேதுவால் ஏற்படும் கெடுபலன்கள் குறைந்து நல்லது நடக்கும்.
ராகு 7-ல் நுழைவதால் மனைவிக்கு முன்கோபம், வேலைச்சுமை, முதுகுத் தண்டில் வலி, மூட்டுவலி வரக்கூடும். சிறிய அளவில் அறுவை சிகிச்சையும் செய்யவேண்டி வரலாம். ராகு 7-ம் வீட்டில் நுழைந்தாலும் குருவுடன் சென்று சேர்வதால் கெடுபலன்கள் குறையும். உங்கள் ராசிநாதன் சனிபகவான் கேந்திர பலம் பெற்று 10-ம் வீட்டில் வலுவடைந்து நிற்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் புது பொறுப்புகள், கவுரவப் பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்வீர்கள்.
5.7.2015 முதல் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும். ஜூலை மாதம் முதல் உத்தியோகத்தில் நிம்மதி உண்டாகும். அதிகாரிகளின் பலம், பலவீனம் எது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். சக ஊழியர்களுடன் இருந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும். பதவி உயர்வுக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். வசதி வாய்ப்புகள் ஓரளவே கிடைத்தாலும் மன அமைதி, மகிழ்ச்சி, நிம்மதியை முழுமையான அளவில் இந்த புத்தாண்டு தரும்.